முதல் பக்கம் தொடர்புக்கு
 

பொதுவான நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு


  சுற்றுப்புறச் சூழ்நிலைகள் மாசடைவதைத் தடுத்தல்  
  • கால்நடைகளின் கொட்டகைள், மற்றும் மேய்ச்சல் நிலங்கள் போன்றவை மாசடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • கால்நடைகளைத் தாக்கியுள்ள ஒட்டுண்ணிகளை தகுந்த ஒட்டுண்ணி நீக்க மருந்துகளைக் கொண்டு நீக்கிவிடுவதால் மேய்ச்சல் நிலங்கள் மாசடைவதைத் தடுக்கலாம்.
  • கால்நடைகளின் உடலில் இருக்கும் வயது முதிர்ந்த ஒட்டுண்ணிகளைத் தகுந்த மருந்துகள் மூலம்  நீக்குவதால், அவற்றிலிருந்து முட்டைகள் வெளியேறுவது தடுக்கப்பட்டு சுற்றுப்புறங்கள் அசுத்தமடையாமல் தடுக்கப்படுகின்றன.
  • ஒட்டுண்ணிகளின் முட்டைகளைக் தகுந்த மருந்துகளைக் கொண்டு அழித்து சுற்றுப்புறத்தை மாசடையாமல் பாதுகாக்கலாம்.
  • மழைக் காலத்திற்கு முன்பாக மாடுகளுக்கு ஒட்டுண்ணி நீக்க மருந்துகளைக் கொடுப்பதால் மேய்ச்சல் நிலங்கள் ஒட்டுண்ணிகளின் முட்டைகள் மற்றும் அவற்றின் இளம் வளர் நிலைப் புழுக்களால் மாசடைவதைத் தடுக்கலாம்.
  • கால்நடைகளின் சாணத்தை முறையாக அப்புறப்படுத்துவதால் சாணம் மூலமாகப் பரவும் ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • சாணத்தை ஒரு இடத்தில் மலை போலக் குவித்து வைப்பதால் அதனுள் உண்டாகும் அதிக வெப்பநிலை காரணமாக ஒட்டுண்ணிகளின்  முட்டைகள் அழிந்துவிடுகின்றன.
  • ஒரே கொட்டகையில் அதிக எண்ணிக்கையிலான கால்நடைகளை அடைத்து வைத்துப் பராமரிக்கக்கூடாது.

  இடைநிலை நோய் தாங்கிகள், நோயினைப் பரப்பும் பூச்சிகள் மற்றும்         நோய்க்கிருமிகளைப் பரப்பும் விலங்குகளைக் கட்டுப்படுத்துதல்
  • மேலாண்மை முறைகளை மேம்படுத்தி இடைநிலை நோய் தாங்கிகளுக்கும் நோய் தாக்குதலுக்குள்ளாகும் விலங்குகளுக்குமிடையில் தொடர்பினைத் துண்டித்தல்
  • இடை நிலை நோய்தாங்கிகளைக் கட்டுப்படுத்தவும், நீக்கவும் நேரடியான செயல்முறைகளை மேற்கொள்ளுதல்
  • இடைநிலை நோய்தாங்கிகளாகச் செயல்படும் நத்தைகளை ரசாயனங்ள் மற்றும் உயிரியல் முறைப்படிக் கட்டுப்படுத்துதல் (வாத்து வளர்ப்பு மற்றும் மேரிஸ் இனத்தைச் சேர்ந்த நத்தைகளை வளர்த்தல்)
  • தேங்கியிருக்கும் தண்ணீரை வடித்தல், நீர் ஆதாரங்களைச் சுற்றி கம்பிவேலி போடுதல், மற்றும் இதர மேலாண்மை முறைகளின்  மூலம் இடைநிலை நோய்தாங்கிகளைக் கட்டுப்படுத்துதல்
  •  இடை நிலை நோய் தாங்கிகளாகச் செயல்படும் பூச்சிகள் மற்றும் உண்ணிகளை ரசாயன முறைகள் மற்றும் உயிரியல் முறைகள் மற்றும் மரபியல் முறைகளின் மூலம் கட்டுப்படுத்துதல்
  • உண்ணிகளுக்கு எதிராக தடுப்பூசிகளைப் போடுவதால் உண்ணிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்
  • சில ஒட்டுண்ணிகளின் தாங்கிகளாகச் செயல்படும் விலங்குகளை அழித்தல் (லீஷ்மேனியாசிஸ் நோய் தாங்கியாகச் செயல்படும் எலிகளை அழித்தல்)

அக ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்துதல்  
  • கால்நடைகளின் குடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளை முறையாக குடற்புழு நீக்கம் செய்வதால் அக ஒட்டுண்ணிகளின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.
  • ஒட்டுண்ணிகளின் தாக்கத்தைக் குறைக்க கால்நடைகளின் கொட்டகையினை ஒட்டுண்ணிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • இடை நிலை நோய் தாங்கிகளை அப்புறப்படுத்துதல்.

இடைநிலை நோய் தாங்கிகளாகச் செயல்படும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்துதல்  
  • கால்நடைகளின் சாணம், கால்நடைக் கொட்டகைகளிலுள்ள இருண்ட ஈரமான மூலைகள் ,தேங்கியிருக்கும் தண்ணீர் போன்றவை பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற இடங்களாகும். எனவே மேற்கூறிய பொருட்கள் மற்றும் இடங்களை முறையாக அப்புறப்படுத்தவோ அல்லது சுத்தம் செய்யவோ வேண்டும்.
  • உண்ணிகள் மற்றும் இதர இரத்தம் உறிஞ்சும் பூச்சிகளின் முட்டைகள் பொதுவாக கால்நடைக் கொட்டகைகளின் மூலை முடுக்குகள், சுவர் இடுக்குகள்,மற்றும் மரப்பொருட்களின் இடுக்குகளில் அப்பூச்சிகளால் இடப்படும். எனவே மேற்கூறிய இடங்களை முறையாக சுத்தம் செய்து உண்ணிகள் மற்றும் இதர ரத்தம் உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
  • கால்நடைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுவாக ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மருந்து பூச்சிக்கொல்லி மருந்து குளியலுக்கு உட்படுத்தவேண்டும்.
  • கால்நடைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுவாக ஏப்ரல்-ஜூன் மற்றும் ஜூலை-செப்டம்பர் மாதங்களில் மருந்து பூச்சிக்கொல்லி மருந்து குளியலுக்கு உட்படுத்தவேண்டும்.
  • கால்நடைகளின் கொட்டகையினைச் சுற்றியும் சுத்தமாகவும், உலர்வாகவும் பராமரிக்கவேண்டும்.
  • கால்நடைக் கொட்டகைகளின் உட்புறத்தில் ஒட்டடைகள் எதுவும் இன்றி சுத்தம் செய்து பூச்சிக்கொல்லி மருந்துகளை மாதம் ஒரு முறை தெளிக்கவேண்டும்.
  • கால்நடைகளின் உடலின் மேற்புறத்தில் பூச்சிக்கொல்லிகளான டிடிடி, லோராக்சேன்,காமக்சீன் மற்றும் இதர மருந்துகளை தெளித்து அவற்றைத் பூச்சிகளின் தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்தலாம்.
  • பண்ணையில் பராமரிக்கப்படும் மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பூச்சிக்கொல்லி மருந்துகளை மாடுகளின் மீது தெளிக்கலாம்.
  • பெரிய பண்ணைகளில்,கோணிப்பை அல்லது அது போன்று பெரிய ஓட்டைகளை உடைய பையை எடுத்துக்கொண்டு அதில் பூச்சிக்கொல்லி மருந்துகளை போட்டு கொட்டகையில், ஏற்ற உயரத்தில், ஏற்ற இடத்தில் கட்டித் தொங்க விட வேண்டும். மாடுகள் அந்தப் பைக்கு அருகில் செல்லும்போது கோணிப்பை மீது மாடுகளின் முதுகுப் பகுதி உரசுவதால் பூச்சிக்கொல்லி மருந்துகள் மாடுகள் மீது விழும். இவ்வாறு பூச்சிக்கொல்லி மருந்துகள் மாட்டுக்கொட்டகையின் நுழை வாயில், வைக்கோல் மற்றும் தீவனங்களை மாடுகளுக்கு இடும் இடம், மேய்ச்சல் தரைக்கு இட்டுச் செல்லும் நுழைவாயில் போன்ற இடங்களில் பூச்சிக்கொல்லிகள் நிரம்பிய பையைத் தொங்கவிடலாம்.
  • ஆர்கனோபாஸ்பேட் வகையைச் சார்ந்த மேலத்தியான், பாரத்தியான் மற்றும் நெகுவான் போன்ற பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை எளிதில் அளிக்கக்கூடியவை என்றாலும், விஷத்தன்மை அதிகம் வாய்ந்தவை.
  • புதியதாகவெளிவந்துள்ள செயற்கையாகத் தயாரிக்கப்படும் டெல்டாமெத்திரின்,சைபர்மெத்திரின் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளும் சந்தையில் கிடைக்கின்றன.
  • பூச்சிக்கொல்லி ரசாயனங்களை உபயோகிக்கும்போது தயாரிப்பாளர்கள் கூறும் அறிவரைகளைக் கட்டாயமாகக் கடைபிடிக்கவேண்டும்.
top

நோய்க்கிளர்ச்சியின் போது நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கட்டுப்படுத்துதல்       மற்றும் குறைத்தல்
  • நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளைத் தனியாகப் பிரித்துப் பராமரிக்கவேண்டும்.
  • பண்ணைக்குள் கால்நடைகள், கால்நடைகளிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், வாகனங்கள், ஆட்கள் பண்ணைக்குள்ளேயும் ,பண்ணைக்கு வெளியேயும் செல்ல அனுமதிக்கக்கூடாது.
  • கால்நடை மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி அளிக்கவேண்டும்.
  • பொதுவான இடத்தில் கால்நடைகளை மேய அனுமதிக்கக்கூடாது.
  • பண்ணைக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கக்கூடாது.
  • பண்ணைக்குள் நுழையும் வாகனங்களின் சக்கரங்கள் மற்றும் மனிதர்களின் கால்கள் கிருமி நாசினிக் கரைசலில் மூழ்கி பிறகு உள்ளே வருமாறு கிருமிநாசினிக்கரைசல் நிரம்பிய ஒரு பள்ளம் அமைக்கவேண்டும்.

நோயுற்ற மாடுகளைத் தனியாகப் பராமரித்தல்  
  • நோயினால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாடுகளை பண்ணையிலுள்ள மற்ற ஆரோக்கியமான மாடுகளிடமிருந்து தனியாகப் பிரித்துப் பராமரிக்க வேண்டும்.
  • இவ்வாறு மாடுகளைத் தனியாகப் பிரித்துப் பராமரிக்கும் கொட்டகை மற்ற பண்ணைக்கொட்டகைகளிலிருந்து தனியாக இருக்கவேண்டும்.
  • ஆரோக்கியமான மாடுகளின் கொட்டகையிலிருந்து உயரமான இடத்தில் நோயுற்ற மாடுகளைப் பராமரிக்கும் கொட்டகை இருக்கக்கூடாது.
  • நோயுற்ற மாடுகளைப் பராமரிக்கத் தனியாக கொட்டகை இல்லாதபட்சத்தில் நோயுற்ற கால்நடைகளை கொட்டகையில் ஒர மூலையில் ஆரோக்கியமான கால்நடைகளிலிருந்து தொலைவில் இருக்குமாறு கட்டிப் பராமரிக்கவேண்டும்.
  • நோயுற்ற கால்நடைகளைப் பராமரிக்கும் வேலையாட்களும், நோயுற்ற கால்நடைகளைப் பராமரிக்க உபயோகப்படுத்தப்படும் வாளிகள் மற்றும் இதர பொருட்கள் ஆரோக்கியமான கால்நடைகளைப் பராமரிக்க உபயோகப்படுத்தக்கூடாது. இதற்குப் பிறகு நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உபயோகப்டுத்தப்படும் உபகரணங்களை கிருமிநீக்கம் செய்தவுடன்தான் ஆரோக்கியமான கால்நடைகளுக்கு உபயோகப்படுத்தவேண்டும்.நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பராமரிப்போர் தங்களுடைய கைகளை சுத்தமாக கிருமி நாசினிக் கரைசலில் கழுவிய பிறகு, தங்களுடைய ஆடைகளை மாற்றிக்கொண்டு ஆரோக்கியமான மாடுகளைப் பராமரிக்கச் செல்லவேண்டும்.
  • நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் முழுவதும் குணமடைந்த பிறகு அம்மாடுகளை ஆரோக்கியமான மாட்டுக்கொட்டகைக்கு ஓட்டிச் சென்று பராமரிக்கலாம்.

புதிதாக வாங்கிய கால்நடைகளைத் தனியாகப் பராமரித்தல்
  • புதிதாக வாங்கிய கால்நடைகளைப் பண்ணைக்குள் கொண்டு செல்லும்போது அவற்றை தனியாகப் பிரித்து அவை ஏதேனும் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதைக் கண்காணிப்பது மிகவும் அவசியமாகும்.
  • இந்த பராமரிப்பு முறையின் முக்கிய நோக்கம், என்னவென்றால் புதிதாக வாங்கப்பட்ட மாடுகளுக்கு ஏதேனும் நோய்த்தொற்று முன்பே இருந்தால் அவை நோய் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றனவா என்பதை அறிவதற்காகும்.எனவே இவ்வாறு புதிதாக வாங்கிய மாடுகளைத் தனியாகப் பிரித்து பராமரிக்கும் காலம் ஒவ்வொரு நோய்க்கிருமியின் நோய் உண்டாக்கும் கால அளவைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக எல்லா நோய்களுக்கும் 30 நாட்கள் தனிமைப் படுத்தும் நாட்களாகக் கருதப்படுகிறது.
  • வெறிநோய்க்கான தனிமைப்படுத்தும் காலம் 6 மாதங்களாகும்.
  • இவ்வாறு தனிமைப்படுத்தும் போது புதிதாக வாங்கிய கால்நடைகளின் சாணத்தைப் பரிசோதித்து கால்நடைகளுக்கு அக ஒட்டுண்ணிகளின் தாக்கம் இருக்கிறதா என்பதைத் தீர்மானித்து அவற்றுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளிக்கவேண்டும்.
  • இந்த சமயத்தில் புற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த கால்நடைகளுக்கு மருந்துக்குளியல் அல்லது மருந்துகளைத் தெளிப்பது 25 அல்லது 26ம் நாள் செய்யலாம்.

பண்ணையிலிருக்கும் கால்நடைகளுக்கு தடுப்பூசி அளித்தல்  
  • ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக கால்நடைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை, நோய் ஏற்படுத்தும் கிருமிகளை செலுத்தி அதிகரிப்பது தடுப்பூசி அளிப்பதற்கான முக்கியமான காரணமாகும்.
  • தடுப்பூசி எனப்படுவது, நோய் ஏற்படுத்தும் கிருமிகளான பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றை உயிரோடோ அல்லது இறந்த நிலையிலோ வைத்திருக்கும் . இதனை உபயோகப்படுத்தி கால்நடைகளில் நோய்களுக்கெதிரான எதிர்ப்புசக்தி தூண்டப்படுகிறது.
  • தடுப்பூசிகளில் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளிடமிருந்து பெறப்பட்ட நச்சுகள், செயலிழந்த நச்சுகள், போன்றவையும் இருக்கும்.
  • சரியான வயதில் பண்ணையிலுள்ள இளம் கன்றுகள் அல்லது இளங்குட்டிகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை அளித்திடவேண்டும்.
  • தகுதி வாய்ந்த கால்நடை மருத்தவரைக் கலந்து ஆலோசனையின் பேரில் தடுப்பூசிகளை மாடுகளுக்குப் போடவேண்டும்.

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்  
  • கால்நடைகளுக்கு குறிப்பிட்ட  கால இடைவெளிகளில் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்
  • ஒவ்வொரு விவசாயியும் தன் பண்ணையிலுள்ள மாடுகளுக்கு குடற்புழுக்களின் தாக்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
  • குடற்புழுக்களின் தாக்கம் குறைவாக இருக்கும்போதே கால்நடைகளுக்கு குடற்புழுநீக்க மருந்துகளை அளிப்பதற்கு சரியான தருணமாகும்.
  • அந்தந்தப் பகுதிகளிலுள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் அளிக்கவேண்டும்.
  • வயது முதிர்ந்த கால்நடைகளுக்கு அவற்றின் சாணத்தைப் பரிசோதித்த பிறகு குடற்புழு நீக்க மருந்துகளை அளிக்கவேண்டும்.
  • வயது வந்த கால்நடைகளுக்கு கன்று ஈன்ற பிறகு குடற்புழுநீக்கம் செய்யவேண்டும்.
  • குடற்புழுநீக்க மருந்துகளைக் கொடுப்பதற்கு முன் 24 மணி நேரம் கால்நடைகளுக்கு தீவனம் எதுவும் அளிக்காமல் இருப்பது நல்லது.
  • இளங் கால்நடைகளுக்கு மாதம் ஒரு முறை தகுந்த மருந்துகளைக் கொண்டு குடற்புழுநீக்கம் செய்யவேண்டும்.
  • வயது முதிர்ச்சியடைந்த கால்நடைகளுக்கு 4-6 மாத இடைவெளியில் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். கர்னாலில் உள்ள தேசிய கறவைமாடுகள் ஆராய்ச்சி நிலையம் கீழ்க்கண்ட குடற்புழு நீக்க அட்டவணையைப் பரிந்துரைக்கிறது. இந்த குடற்புழு நீக்க அட்டவணை பொதுவாக எருமைக்கன்றுகளுக்கு மிகவும் பொருத்தமானது. ஏனெனில் எருமைக்கன்றுகளில் குடற்புழுக்களின் பாதிப்பால் அதிக அளவு இறப்பு ஏற்படுகிறது.
  • ஈரப்பதம் அதிகமுள்ள வெப்பமண்டலப்பிரதேசங்களில் அதிகப்படியான அக ஒட்டுண்ணிகளின் தாக்கம் கால்நடைகளில் காணப்படும் போது கிடேரிக்கன்றுகளின் இரண்டு வயது வரை வருடம் இரண்டு முறை குடற்புழுநீக்கம் செய்யவேண்டும்.
  • வயது முதிர்ந்த கால்நடைகளுக்கும் பருவமழைக் காலத்திற்கு முன்பும் பருவ மழையின் போதும், ஒரு வருடத்திற்கு இரண்டு முறை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.
top

நோய்தாங்கிகளை அப்புறப்படுத்துதல்  
  • நோயின் தாக்கம் ஏற்பட்டு குணமடைந்த கால்நடைகள் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருப்பது போலத் தோன்றினாலும் அதன் உடல் திசுக்களில் நோய் உருவாக்கும் நோய்க்கிருமிகள் இருக்கும்.இவ்வாறு நோய் ஏற்படுத்தும் நோய்க்கிருமிகள் உடலில் இருக்கும் கால்நடைகள் நோய்தாங்கிகள் என்று அறியப்படுகின்றன.
  • கால்நடைகள் இவ்வாறு நோய்க்கிருமிகளைத் தாங்குவது பல வருடங்ளுக்குக் கூட இருக்கும். இந்த கால்நடைகள் மற்ற நோயற்ற கால்நடைகளுக்கு நோயினைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • டியூபர்குளோசிஸ், எலிக்காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பைரோஸிஸ் மற்றும் கன்று வீச்சு நோய் போன்ற நோய்களுக்கு பண்ணையில் பராமரிக்கப்படும் கால்நடைகள் நோய்த்தாங்கிகளாகச் செயல்படுகின்றன.
  • இவ்வாறு நோய் தாங்கிகளாகச் செயல்படும் கால்நடைகளைக் கண்டறிய பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.இப்பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பண்ணையிலுள்ள எல்லாக் கால்நடைகளுக்கும் செய்யப்பட்டு நோய்தாங்கிகள் கண்டறியப்பட்டு அவற்றை பண்ணையிலிருந்து நீக்கப்படவேண்டும்
  • பொதுவாக பண்ணையிலிருக்கும் கால்நடைகளுக்கு செய்யப்படும் பரிசோதனைகளாவன- டியூபர்குளின் பரிசோதனை, ஜோனின் பரிசோதனை, அக்லூட்டினேசன் எனப்படும் அணுத்திரள் பரிசோதனை மற்றும் தெளிவற்ற நோய் அறிகுறிகளையுடைய மடிநோயினைக் கண்டறியும் பரிசோதனைகள் ஆகும்.

டியூபர்குளின் பரிசோதனை  
  • மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனப்படும் பாக்டீரியாவின் சுத்தப்படுத்தப்பட்ட புரதமே டியூபர்குளின் எனப்படும்.இந்த டியூபர்குளின் புரதத்தை டியூபர்குளோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு செலுத்தும்போது அழற்சி ஏற்பட்டு இந்த புரதத்தை செலுத்திய இடத்தில் வீக்கம் ஏற்படும்.
  • ஆனால் ஆரோக்கியமாக உள்ள மாடுகளில் டியூபர்குளின் புரதத்தை அளவுக்கு அதிகமாக செலுத்தினாலும் எந்தவித விளைவுகளும் ஏற்படாது. எனவே டியூபர்குளோசிஸ் அல்லது காச நோயினைக் கண்டறிய டியூபர்குளின் பரிசோதனை எல்லா விதமான கால்நடைகளிலும் பயன்படுகிறது.
  • இந்தியதட்பவெப்ப நிலைகளில் ஜனவரி மாதம் கால்நடைகளுக்கு டியூபர்குளின் பரிசோதனையை மேற்கொள்ளுவது ஏற்ற காலநிலையாகும்
  • டியூபர்குளின் புரதத்தை தோலுக்கடியிலும்,கண் வழியாவும்,கால்நடைகளுக்கு செலுத்திப் பரிசோதிக்கலாம்.ஆனால் தோலுக்கடியில் செலுத்துவதே எளிதான,பிரபலமான முறையாகும்.
  • தோலுக்கடியில் டியூபர்குளின் பரிசோதனையைச் செய்வது எல்லா மாட்டினங்களிலும் பின்பற்றப்படுகிறது.
  • இப்பரிசோதனையைச் செய்வதற்கு ஏற்ற இடம் கழுத்துப் பகுதியாகும்.
  • மாட்டினங்களில் இப்பரிசோதனை வால் மற்றும் பிறப்புறுப்பில் தோலுக்கடியில் மேற்கொள்ளலாம்.
  • கழுத்துப்பகுதியில் இப்பரிசோதனையினை மத்தியில் செய்வது நல்லது. ஏனெனில் தோள்ப்பட்டைக்கு அருகிலும், தாடைப்பகுதியிலும் இப்பரிசோதனையைச் செய்யும்போது சரியான முடிவு கிடைக்காது.
  • பரிசோதனை செய்யப்படும் பகுதியில் முடிகளை வெட்டி விட்டு ஸ்பிரிட் மூலம் சுத்தம் செய்யவேண்டும்.
  • 0.1 மிலி பிபிடிஐ தோலுக்கடியில் செலுத்தவேண்டும்.இவ்வாறு சரியாக செலுத்தியிருந்தால் தோலுக்கடியில் ஒரு பாசி போன்ற வீக்கம் தென்படும்.
  • இப்பரிசோதனை மூலம் நோய்தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்ட கால்நடைகளை பண்ணையிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
  • கால்நடைப் பண்ணைகளில் ஆரம்ப காலத்தில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டியூபர்குளின் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.பிறகு கால்நடைகளின் உடல்நிலைக்கேற்றவாறு அவற்றுக்கு இந்தப் பரிசோதனையை வருடம் ஒருமுறை செய்யலாம்.

ஜோனின் பரிசோதனை  
  • மைக்கோபாக்டீரியம் பாராடியூபர்குளோசிஸ் பாக்டீரியாவின் சுத்தப்படுத்தப்பட்ட புரதம் ஜோனின் ஆகும்.
  • இது பசு மற்றும் எருமை மாடுகளில் ஜோனிஸ் நோயின் தாக்குதலைக் கண்டறிய பயன்படுகிறது.
  • ஜோனின் பரிசோதனை டியூபர்குளோசிஸ் நோய்க்கான பரிசோதனை போன்றே செய்யப்படுகிறது.
  • ஜோனின் புரதம் செலுத்தப்பட்ட இடத்தில் மாடுகளில் வலியுடன் கூடிய 4 மிமீ அளவுக்கும் அதிகமான தோல் தடிப்பு ஏற்படுதல் ஜோனிஸ் நோயால் மாடுகள் தாக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரமாகும்.
  • இந்த பரிசோதனையில் நோய் தாக்கியுள்ளதாக அறியப்பட்ட அனைத்து கால்நடைகளையும் பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

கன்று வீச்சு நோய்க்கான அணுத்திரள் பரிசோதனை அல்லது அக்லூட்டினேசன் பரிசோதனை
  • ஆன்டிஜென் எனப்படும் இறந்த பாக்டீரியாவிற்கும், மாடுகளின் திசு திரவங்களில் குறிப்பாக ஊநீரில் உள்ள நோய் எதிர்ப்பு புரதத்திற்கும் ஏற்படும் வினையில் ஆன்டிஜென் எனப்படும் பாக்டீரியாக்களை நோய் எதிர்ப்பு புரதங்களான ஆன்டிபாடிகள் சூழ்ந்து கொள்ளும். இதனைப் பின்புலமாகக் கொண்டு அணுத்திரள் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • புரூசெல்லோசிஸ் அல்லது கன்று வீச்சு நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளின் ஊநீரில் இருக்கும் அக்லூட்டினின் எனும் நோய் எதிர்ப்பு புரதம், இறந்த புரூசெல்லா பாக்டீரியாக்களுடன் சேரக்கப்படும்போது நோய் எதிர்ப்பு புரதமும், புரூசெல்லா பாக்டீரியாக்களும் ஒன்றோடொன்று இணையும்.இந்த நிலையே அக்லூட்டினேசன் எனப்படும்.
  • ஆரோக்கியமாக இருக்கும் மாடுகள் இப்பரிசோதனைக்குட்படுத்தப்படும் போது எதிர்மறை முடிவுகளே (நெகட்டிவ்) கிடைக்கும்.
  • விரைவாக செய்யப்படும் அணுத்திரள் பரிசோதனைகள் மிகவும் எளிமையானவை. களப் பரிசோதனைகளாக இவற்றை மேற்கொள்ளலாம்.
  • டியூப் அக்லூட்டினேசன் எனப்படும் பரிசோதனையை பரிசோதனைக்கூடத்தில் மட்டுமே மேற்கொள்ளமுடியும்.
  • இரத்தம், பாதிக்கப்பட்ட மாடுகளின் பால் போன்றவற்றைப் பயன்படுத்தி அணுத்திரள் பரிசோதனைகளை அருகிலுள்ள பரிசோதனைக்கூடங்களில் மேற்கொள்ளலாம்.
  • அக்லூட்டினேசன் பரிசோதனை மூலம் புரூசெல்லோசிஸ் நோய் மாடுகளைத் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அம்மாடுகளை பண்ணையிலிருந்து நீக்கிவிட வேண்டும்.

மடிநோய்க்கான ஸ்டிரிப் கப் பரிசோதனை  
  • மடி நோய் தாக்குதலுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாடுகளின் மடிக்காம்பிலிருந்து சில பீர்கள் பாலை கறுப்பு நிற கிண்ணங்கள் இணைக்கப்பட்ட ஒரு உபகரணத்திலுள்ள கிண்ணத்தில் பீய்ச்சி ஏதேனும் கட்டிகள் அல்லது திரிகள் போன்றவை பாலில் இருக்கிறதா என்பதைப் பார்க்கவேண்டும். இவ்வாறு மாடுகளுக்கு மடி நோய் இருப்பது முன்னமே கண்டறியப்பட்டால் விரைந்து சிகிச்சை அளிக்கலாம்.
  • அல்கைல் சல்பேட் அல்லது சல்போனேட் போன்ற சோப்புத்தன்மையுடைய திரவங்களை மடிநோயினால் தாக்கப்பட்ட மடிகளில் இருந்து கறக்கப்பட்ட பாலுடன் கலக்கும்போது திரிகள் அல்லது கட்டிகள் தோன்றினால் மாடுகள் மடிநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம்.

மடி நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை - கலிபோர்னியா மடிநோய்        பரிசோதனை
  • ஏ,பி, சி,டி எனும் நான்கு கிண்ணங்கள் இணைக்கப்பட்ட ஒரு ஹேண்டிலில், மடி நோயால் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாடுகளின் மடிக்காம்பிலிருந்து பாலைத் தனித்தனியாக கறக்கவேண்டும்.
  • இந்த உபகரணத்தை செங்குத்தாக வைத்தால் அதிலுள்ள அதிகப்படியான பால் வழிந்து, 2 மிலி மட்டுமே இருக்கும்.
  • இந்த பாலுடன் சிஎம்டி ரசாயன திரவத்தை சேர்க்கவேண்டும். இதில் நுரை அல்லது குமிழிகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • பிறகு பால் மற்றும் சிஎம்டி திரவத்தை நன்றாக கலக்குமாறு உபகரணத்தை நன்றாக படுக்கைவாக்கில் ஆட்டவேண்டும்..
  • இவ்வாறு செய்யும்போது திரிகள் அல்லது கட்டிகள் தோன்றினால் மாடுகள் மடிநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். இவ்வாறு தோன்றும் கட்டிகள் அல்லது திரிகளின் அளவை வைத்து மாடுகள் மடிநோயின் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்டறியலாம்.
  • பரிசோதனை முடிந்த பிறகு இந்த உபகரணத்திலுள்ள பாலைக் கொட்டி விட்டு, சுத்தமான தண்ணீரால் நன்றாக கழுவவேண்டும்.பிறகு உபகரணத்தை அடுத்த பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம்.
  • மாதம் ஒரு முறை பண்ணையிலுள்ள அனைத்து மாடுகளையும் சிஎம்டி பரிசோதனைக்குட்படுத்தி மடிநோய் தாக்கியுள்ளதைக் கண்டறியலாம்.
  • தெளிவற்ற நோய் அறிகுறிகளையுடைய மடி நோயால் மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டறிந்தால் அவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவேண்டும்.
top

இறந்த கால்நடைகளின் உடலை அப்புறப்படுத்துதல்  
  • கால்நடைகளைத் தாக்கிய நோய்கள் மற்ற மாடுகளுக்கும்,மனிதர்களுக்கும் பரவாமல் தடுப்பதற்காக நுண்ணுயிரி நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளின் உடலை முறையாக அப்புறப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
  • நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளின் உடலை பொதுவான நீர்நிலைகளான ஓடைகள் அல்லது ஆறுகள் போன்றவற்றிற்கு அருகில் போடக்கூடாது.ஏனெனில் தண்ணீர் மூலம் நோய்க்கிருமிகள் மற்ற இடங்களுக்கு எளிதில் பரவும்.
  • இறந்து போன கால்நடைகளின் உடலை பண்ணைக் கொட்டகையில் அப்படியே வைத்திருக்கக்கூடாது.இவ்வாறு வைத்திருப்பதால் இறந்த கால்நடைகளின் உடல் மீது கடிக்கும் ஈக்கள் மற்றும் எலியினங்கள் அமர்ந்து மற்ற கால்நடைகளுக்கு எளிதில் நோயைப் பரப்பும்.
  • நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளின் உடலை கால்நடை மருத்துவர் அனுமதியின்றி கிழிப்பது ஆபத்தானது.
  • இறந்துபோன கால்நடைகளின் உடலை முறையாகப் புதைக்கவோ அல்லது எரிக்கவோ செய்யவேண்டும்.

இறந்த கால்நடைகளின் உடலைப் புதைத்தல்  
  • இறந்த கால்நடைகளின் உடலைப் புதைப்பது பொதுவாகப் பின்பற்றப்படும் ஒரு முறையாகும்.
  • வடிகால் வசதியற்ற இடங்களில் இறந்த கால்நடைகளை ஆழமாகப் புதைத்தல் இது ஒரு பாதுகாப்பன முறையாகும்.
  • ஊன் உண்ணும் பிராணிகளிலிருந்து பாதுகாப்பதற்கும், பாக்டீரியல் ஸ்போர்கள் மண்ணின் மேற்பகுதிக்கு வராமல் தடுப்பதற்கும் இறந்த கால்நடைகளை ஆழமாக மண்ணில் புதைக்கவேண்டும்.
  • இறந்த கால்நடைகளின் உடலை தள்ளு வண்டியில் வைத்துப் புதைக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும். கால்நடைகளின் உடலைத் தரையில் இழுத்துச் செல்லக்கூடாது.
  • இறந்த கால்நடைகளின் உடலை புதைக்கும் இடத்திற்கு எடுத்துச்செல்லுவதற்கு முன்பாகவே அவற்றைப் புதைக்கும் குழி தயாராக இருக்கவேண்டும்.
  • இறந்த கால்நடைகளின் உயரமான உடல் பகுதி நிலத்திலிருந்து 1.5 மீட்டர் ஆழத்தில் இருக்குமாறு புதைகுழி வெட்டப்படவேண்டும்.
  • இறந்த கால்நடைகளின் சாணம், படுப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட வைக்கோல், தீவனம் மற்றும் கால்நடைகள் படுத்திருந்த கொட்டகையில் 1.5 செமீ ஆழத்திற்கு வெட்டிய மண் போன்றவற்றையும் கால்நடைகளைப் புதைக்கும்போது அதனுடன் சேர்த்து புதைத்து விட வேண்டும்.
  • இறந்த கால்நடைகளைப் புதைத்த இடத்தில் நிலத்தடி தண்ணீரின் அளவு நிலத்திலிருந்து 2.5 மீட்டர் இருக்கவேண்டும்.
  • புதிதாகத் தயாரிக்கப்பட்ட சுண்ணாம்புத்தூளை இறந்த கால்நடைகளின் உடல் மீது தூவி பிறகு அதன் மீது மண்ணைப் போட்டு,பிறகு சில கற்களைப் போட்டு புதைகுழியினை மண் கொண்டு நிரப்பவேண்டும்.

இறந்த கால்நடைகளின் உடலை எரித்தல்  
  • இறந்த கால்நடைகளின் உடலை அப்புறப்படுத்த சிறந்த முறை அவற்றை எரிப்பதாகும்,குறிப்பாக வேறெங்கும் அவற்றை இழுத்துச்செல்லாமல் இறந்து கிடந்த இடத்திலேயே எரிப்பது மிகவும் சிறந்த முறையாகும். இறந்த கால்நடைகளின் உடலை எரிக்க இடத்தைத் தேர்வு செய்த பிறகு அதற்கான கால்வாயை வெட்டவேண்டும்.
  • இறந்த கால்நடைகளின் உடலை எரிக்க 0.5மீட்டர் ஆழமுள்ள, முடிவில் குறைந்த ஆழமுடையதாக இருக்குமாறு, இறந்த கால்நடையின் நீள அகலத்திற்குப் பொருந்துமாறு ஒரு கால்வாய் வெட்டவேண்டும். காற்று வீசும் திசையிலேயே இக் கால்வாய் அமைக்கவேண்டும்.
  • முதலில் இக்கால்வாயை மரக்கட்டைகளைக் கொண்டு நிரப்பவேண்டும். பிறகு மரக்கட்டைகளின் மீது இரும்பு பைப்புகளை வைத்து அதன் மீது இறந்த கால்நடைகளின் உடலை வைக்கவேண்டும்.அடியிலுள்ள மரக்கட்டைகள் எரியும்போது கால்நடைகளின் உடலும் அதிலுள்ள அனைத்து நோயினைப் பரப்பும் பொருட்களும் சேர்ந்து எரிந்து விடவேண்டும்.
  • நகரங்களில் இறந்த கால்நடைகளின் உடலை உபயோகித்து இதர உபயோகமான பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் இருக்கும்.இந்த இடங்களில் இறந்து போன கால்நடைகளின் தோல் உறிக்கப்படுவதால், அதன் மூலம் நோய் பரவும் வாய்ப்பு அதிகம். எனவே இந்த தொழிற்சாலைகளில் இறந்த கால்நடைகளின் தோலை உறித்தபிறகு அவற்றை கிருமிநாசினிக் கரைசலில் முக்கி வைக்கப்படுகின்றன. பிறகு இறந்த கால்நடைகளின் உடலிலிருந்து கொழுப்பு பிரித்தெடுக்கப்பட்டு சோப் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.இந்த தொழிற்சாலைகளைப் பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கவேண்டும். இதனால் இறந்த கால்நடைகளின் உடலை இந்த தொழிற்சாலைகள் சேகரித்து அவற்றை உபயோகப்படுத்தமுடியும்.

கால்நடைக் கொட்டகைகளை கிருமி நீக்கம் செய்தல்  
  • சாதாரணமாக கால்நடைக் கொட்டகைகளை தினமும் நன்றாகக் கழுவி சுத்தப்படுத்துவதும், தினசரி சூரியவெயில் கொட்டகையில் படுமாறு கொட்டகைகளை அமைப்பதும், கால்நடைக் கொட்டகைகளில் கிருமிகளற்ற சூழ்நிலையினை உருவாக்கும்.
  • ஆனால் கால்நடைப்பண்ணைகளில், நோய்க்கிளர்ச்சி ஏற்படும்போது , கிருமி நீக்கம்செய்வது கட்டாயமாக, மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளவேண்டும்.
  • கால்நடைக் கொட்டகைகளின் தரை, சுவர்களின் 1.5 மீட்டர் உயரம்,தீவனத்தொட்டி, தண்ணீர்த்தொட்டி,மற்றும் கால்நடைகளால் உபயோகப்படுத்தப்படும் இதர உபகரணங்கள் போன்றவற்றை கிருமி நீக்கம் செய்யவேண்டும்.
  • கிருமி நீக்கம் செய்வதில் முதல் படி, கால்நடைக் கொட்டகையிலுள்ள அனைத்து அழுக்குளையும் அகற்றி விடவேண்டும்.ஏனெனில் அழுக்குகள் கிருமி நாசினிகளின் செயல்திறனைக் குறைத்துவிடும்.
  • கால்நடைக் கொட்டகைகளின் தரை, சுவர்களின் 1.5 மீட்டர் உயரம்,தீவனத்தொட்டி, தண்ணீர்த்தொட்டி போன்றவற்றை நன்றாக சுத்தம் செய்து, சாணம், மற்றும் இதரக் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து, குப்பைகள் கால்நடைகளுக்கு அருகில் இல்லாமல் அப்புறப்படுத்தப்படவேண்டும்.
  • இவ்வாறு அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்தவுடன், கால்நடைக் கொட்டகையினை 4 % சலவை சோடாக் கரைசலால் நன்கு கழுவ வேண்டும் (4 கிலோ துணி சோடாவை 100 லிட்டர் தண்ணீரில் கரைத்து).
  • அங்கீகரிக்கப்பட்ட கிருமி நாசினியைக் கால்நடைக் கொட்டகைகளில் நன்றாகத் தூவியோ அல்லது தெளித்தோ விடுவதால் அவற்றின் செயல்திறன் 24 மணி நேரம் வரை இருக்கும்.
  • பிறகு கால்நடைக்கொட்டகைகளை சுத்தமான தண்ணீரால் நன்றாகக் கழுவ வேண்டும்.
  • தண்ணீர் மற்றும் தீவனத்தொட்டிகளின் உட்புறத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்பு அடிக்கவேண்டும். .

மேய்ச்சல் நிலங்களைக் கிருமிநீக்கம் செய்தல்  
  • மேய்ச்சல் நிலங்களில் இறந்த கால்நடைகளோ, கருச்சிதைவு ஏற்பட்டு வீசப்பட்ட கன்று, சாணம் போன்றவற்றை உடனே அப்புறப்படுத்தி அந்த மேய்ச்சல் நிலங்களில் 3-4 மாதங்களுக்கு கால்நடைகளை மேய அனுமதிக்கக்கூடாது.
  • மேய்ச்சல் நிலங்களை உழவு செய்து,6 மாதங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.இதனால் மேய்ச்சல் நிலங்களிலுள்ள நோய் ஏற்படுத்த்தும் கிருமிகள் அழிந்துவிடும்.

பொதுவாக உபயோகிக்கப்படும் கிருமி நாசினிகளும் அவற்றின் உபயோகமும்  
  • 1.பிளீச்சிங் பவுடர் (லைம் குளோரைடு)
    • கால்நடைகளில் தொற்று நோய் தாக்கம் ஏற்படும் போது, கால்நடைக் கொட்டகைகளைச் சுத்தம் செய்யவும், தண்ணீரை சுத்தம் செய்யவும் பிளீச்சிங் பவுடர் பயன்படுகிறது.
    • பால் கறக்கும் கொட்டகைகள் அல்லது இடங்களில் பிளீச்சிங் பவுடரை உபயோகிக்கக்கூடாது.ஏனெனில் அவ்வாறு உபயோகித்தால் பாலில் பிளீச்சிங் பவுடரின் வாசனை ஏற்படும்.
    • பிளீச்சிங் பவுடரை உபயோகிக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் செயல்படும் குளோரின் அளவு 30 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடாது
    • பிளீச்சிங் பவுடரை நேரடியாக தெளித்து விட வேண்டும்
    • காற்றுப் புகாத டப்பாக்களில் பிளீச்சிங் பவுடரைப் போட்டு வைக்கவேண்டும்.ஈரமான சுற்றுப்புறம், நேரடியாக சூரிய வெளிச்சம் படுவதால் பிளீச்சிங் பவுடரின் செயல்பாடு குறைந்து விடும்
  • 2.போரிக் அமிலம்
    • போரிக்  அமிலம் மாடுகளின் மடியைக் கழுவுவதற்குப் பயன்படுகிறது.
    • இது ஒரு செயல்திறன் குறைந்த கிருமி நாசினியாகும்.மேலும் போரிக் அமிலத்தை அதிகப்படியாக உபயோகிக்கும் போது நரம்பு மண்டலத்தை தாக்கி செயலிழக்கச் செய்துவிடும்
    • கண்களைக் கழுவுவதற்கும்,உடலின் மற்ற உணரும் உறுப்புகளைக் கழுவுவதற்கும் போரிக் அமிலம் பயன்படுகிறது.
    • கிருமி நாசினியாக செயல்படுவதற்கான போரிக் அமிலத்தின் அளவு 6 சதவிகிதமாகும்.
    • போரிக் அமிலக் கரைசலை தெளித்தல் மூலம் உபயோகிக்கலாம்.
    • இந்நாட்களில் போரிக் அமிலத்திற்கு பதிலாக எதிர் உயிரி மருந்துகளை கண்களைக் கழுவப் பயன்படுத்துகிறார்கள்.
  • காஸ்டிக் சோடா
    • பண்ணைக் கட்டிடங்களிலும்,கால்நடைகளின் கொட்டகைகளிலும் காஸ்டிக் சோடா ஒரு சிறந்த கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.இது ஒரு சிறந்த சுத்தப்படுத்தும் பொருளாகவும், கிருமிகளைக் கொல்வதில் சிறந்ததாகவும் விளங்குகிறது.
    • கோமாரி நோய், பன்றி காலரா நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களை காஸ்டிக் சோடா எளிதில் கொன்று விடும்.
    • ஆனால் காச நோய் எனப்படும் டியூபர்குளோசிஸ்,மற்றும் ஜோனிஸ் நோய் உண்டாக்கும் மைக்கோபாக்டீரியம் இனத்தைச் சார்ந்த பாக்டீரியாக்களை இது கொல்வதில்லை.
    • பொதுவான உபயோகத்திற்கு 2 சதவிகித கரைசலாகவும், ஆந்த்ராக்ஸ் அல்லது அடைப்பான்  நோய் மற்றும் சப்பை நோயை  ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் ஸ்போர்களைக் கொல்ல 5% கரைசலாகவும்  உபயோகப்படுத்தலாம்.
    • காஸ்டிக் சோடாக் கரைசலை தெளிப்பதன் மூலம் உபயோகப்படுத்தலாம்.
    • ரப்பர் கை உறைகள், மூக்கு கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை காஸ்டிக் சோடா உபயோகப்படுத்தும் போது அணிந்திருக்க வேண்டும்.ஏனெனில் காஸ்டிக் சோடாக் கரைசல் தோல் மீது படும் போது எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் துணிகளையும் சேதப்படுத்தும்.
  • 4.கிரெசால்
    • கிரெசால்கள் தண்ணீரில் சிறிதளவே கரையக்கூடியவை. எனவே சோப்புகளுடன் கலந்து உபயோகப்படுத்தப்படுகின்றன.
    • டியூபர்குளோசிஸ் மற்றும் ஜோனிஸ் நோயினை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்வதில் கிரெசால் நன்றாக செயல்படுகிறது.ஆனால் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியல் ஸ்போர்களைக் கொல்வதில்லை.
    • பால் கறக்கும் இடத்தைத் தவிர மற்ற பண்ணைக் கொட்டகைகளின் தரைகள்,சுவர்கள் மற்றும் உபகரணங்களை சுத்தப்படுத்துவதற்கு கிரசால்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஏனெனில் பால் கிரசால்களின் வாசனையை உட்கிரகித்துக்கொள்ளும்.
    • கிரசால்களை 2-3 சதவிகித கரைசல்களாக உபயோகிக்க வேண்டும்.
    • கிரசால் கரைசலை தெளிப்பதன் மூலம் உபயோகிக்கலாம்.
    • கிரசால் கரைசலைத் தயாரிக்க கடினத்தன்மையற்ற மென்மையான நீரை உபயோகிக்க வேண்டும். கடின நீரை உபயோகப்படுத்தினால் உருவாகும் சோப்பு கீழே படிந்து விடும்
    • லைசால் எனப்படுவது கிரசால்லம் சோப்பும் கலந்த கலவையாகும்.
  • சுண்ணாம்பு
    • சுண்ணாம்பு வாசனைப் பொருளாகவும்,கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
    • கால்நடைகளின் சாணம் மற்றும் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் திரவங்கள், தரைகள் மீது நேரடியாக சுண்ணாம்பைத் தெளித்தும் அல்லது சுண்ணாம்புக் கரைசலை அடித்தும் பயன்படுத்தலாம்.
    • சுண்ணாம்புக் கரைசலைத் தெளித்தல்,   மொழுவுதல் மற்றும் சுண்ணாம்புத் தூளாகவே தெளிப்பதன் மூலம் உபயோகப்படுத்தலாம்.
    • புதிதாகத் தயாரிக்கப்பட்ட சுண்ணாம்புக் கரைசலையே எப்போதும் உபயோகிக்கவேண்டும்.
  • ஃபீனால் (கார்பாலிக் அமிலம்)
    • பீனால் பல்வேறு விதமான பாக்டீரியாக்களுக்கு எதிராகச் செயல்படும். ஆனால் ஸ்போர்கள் மற்றும் வைரஸ்களை இது அழிப்பதில்லை.
    • கரிமத்தன்மை வாய்ந்த பொருட்கள் இருக்கும் போது இதன் செயல்திறன் பாதிக்கப்படுவதில்லை.ஆனால் எண்ணெய் அல்லது ஆல்கஹால் இருக்கும் போது இதன் செயல் திறன் பாதிக்கப்படுகிறது.
    • அரிப்புத்தன்மை வாய்ந்த ஃபீனால் ஒரு நச்சாகும்.
    • ஃபீனாலின் செயல்படும் அளவு 1-2 சதவிகிதமாகும்.
    • தெளிப்பதன் மூலம் ஃபீனாலை உபயோகப்படுத்தலாம்.
    • ஃபீனாலை உபயோகிக்கும்போது கண்கள், தோல் பகுதி மற்றும் துணிகள் மீது படாதவாறு உபயோகிக்க வேண்டும்.
  • குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள்
    • குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள் ஒரு கேட்டயானிக் சுத்தப்படுத்தும்  பொருளாகும்.
    • ஸ்போர்கள் மற்றும் வைரஸ்களை இது அழிப்பதில்லை.
    • பால் பண்ணையில் உபயோகிக்கப்படும்  பாத்திரங்கள், பால் கறப்பவரின் கைகள் மற்றும் மாடுகளின் மடியைத் துடைக்கப் பயன்படுத்தும் துண்டுகள் போன்றவற்றை கிருமி நீக்கம் செய்ய இவை பயன்படுகின்றன.
    • செட்ரிமைட் குவார்ட்டனரி அமோனியம் பொருட்களுக்கான ஒரு உதாரணமாகும்.
    • கிருமிநாசினியாகச் செயல்படத் தேவைப்படும் அளவு 0.1 சதவிகிதமாகும். மடிக்காம்புகளின் மீது  தடவவும் மடி நோய் வராமல் தடுக்க பால் கறப்பவரின் கைகளைக் கழுவவும் 0.5% கரைசல் பயன்படுகிறது.
    • மடியை சுத்தம் செய்யும் துணியை நனைக்கவும், பால் கறப்பவரின் கைகளை சுத்தம் செய்யவும் 0.1 சதவிகித குவார்ட்டனரி அமோனியம் பொருட்கள் கரைசலைப் பயன்படுத்தலாம்.
    • இந்தக் கிருமி நாசினிக் கரைசலை உபயோகப்படுத்தி பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன்பு கொதிக்கும் தண்ணீரில் பால் பண்ணையில் பயன்படுத்தப்படும் பாத்திரங்களைக் கழுவ வேண்டும்.
  • சோப்பு
    • சோப்பு ஒரு ஆனயானிக் சுத்தப்படுத்தும் பொருளாகும்.
    • சோப்பு கிருமிகளைக் கொல்வதில் செயல்திறன் குறைந்தது.
    • பல்வேறு இடங்களை சுத்தம் செய்வதில் குறிப்பாக கால்நடைகளின் தோல் பகுதியைச் சுத்தம் செய்வதற்கு சோப்பு பயன்படுகிறது.
    • கிருமிநாசினிகளை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக சோப்பைப் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம்.
    • சோப்பை அது பயன்படுத்தும் இடத்தில் நன்றாகத் தேய்த்துப் பயன்படுத்தலாம்.
    • பல்வேறு விதமான பகுதிகளின் மேற்பரப்பைச் சுத்தம் செய்ய சோப்பைப் பயன்படுத்தலாம்.
  • சோடியம் ஹைப்போகுளோரைட்
    • இது குளோரின் உள்ள ஒரு கிருமி நாசினியாகும்.
    • இது  ஒரு சிறந்த கிருமிநாசினியாகும். டியூபர்குளோசிஸ் நோய் ஏற்படுத்தும். பாக்டீரியாக்களுக்கு எதிராக இது செயல்படுவதில்லை.மேலும் கரிமப்பொருட்கள் இருக்கும்போதும் இந்த கிருமி நாசினி நன்றாக செயல்படாது.
    • கிருமி நாசினியாகச் செயல்பட தேவைப்படும் குளோரின் அளவு ஒரு மில்லியனில் 200 பகுதிகளாகும்.மேலும் பாத்திரங்களை சுத்தப்படுத்துவதற்கு 330 மிலி சோடியம் ஹைப்போ குளோரைட்டையும், 200 கிராம் துணி சோடாவையும் 100 லிட்டர் சூடான தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.மாடுகளின் மடியைச் சுத்தப்படுத்த 60 மிலி சோடியம் ஹைப்போ குளோரைட்டுடன் 10 லிட்டர் சுத்தமான தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம்.
  • வாஷிங் சோடா (சோடா மண் அல்லது சோடியம் கார்போனேட்)
    • கோமாரி நோய் போன்ற வைரஸ் நோய்களின் கிளர்ச்சி ஏற்படும் போது கால்நடைகளின் கொட்டகையினைச் சுத்தம் செய்ய இந்த கிருமிநாசினி பயன்படுகிறது.
    • இது ஒரு நல்ல சுத்தப்படுத்தும் பொருளாகும்.
    • கிருமி நீக்கம் செய்ய வாஷிங் சோடாவைப் பயன்படுத்த வேண்டிய அளவு 4% ஆகும்.
    • வாஷிங் சோடாக் கரைசலைக் கொண்டு பொருட்களையும், கொட்டகைகளையும் கழுவி கிருமி நீக்கம் செய்யலாம்.
    • லை சோடா மண்ணை விட அதிகத்திறனுடைய கிருமிநாசினியாக கோமாரி நோய் ஏற்படுத்தும் வைரஸைக் கொல்வதற்குப் பயன்படுகிறது.
    • ஆனால் இதை சூடான கரைசலாக உபயோகப்படுத்தவேண்டும்.

பொதுவான நோய்த் தடுப்பு முறைகள்  
  • தீவனத்தொட்டிகளில் மட்டுமே கால்நடைகளுக்குத் தீவனத்தை அளிக்கவேண்டும்.தீவனத்தொட்டிகள் கால்நடைகளின் சாணம் மூலம் அசுத்தமடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர் தொட்டிகளும் சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கால்நடைகளை முறையாக மேய்ச்சலுக்கு அனுப்புவதன் மூலம் மேய்ச்சல் நிலங்கள் ஒட்டுண்ணிகளின் தாக்கத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.
  • சுத்தமான, மற்றும் பாதுகாப்பான மேய்ச்சல் நிலங்களை(6-12 மாதங்கள் மேய்ச்சலுக்கு உபயோகப்படுத்தாமல் இருத்தல்) உபயோகப்படுத்துவதால் அக ஒட்டுண்ணிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • மேய்ச்சல் நிலங்களில் சுழல் முறையில் பல்வேறு வகையான கால்நடைகளை  மேய அனுமதிப்பதால் மேய்ச்சல் நிலங்கள் அசுத்தமடைவதைத் தடுக்கலாம்.
  • புதிதாக பண்ணைக்கு வாங்கப்படும் கால்நடைகளை குறைந்தது 30 நாட்களுக்காவது தனியாக பராமரித்த பிறகு குடற்புழு நீக்கம் செய்த பின்னரே பண்ணையிலுள்ள மற்ற கால்நடைகளுடன் சேர்த்துப் பராமரிக்கலாம்.
  • இளங்கால்நடைகள், வயது முதிர்ச்சியடைந்த கால்நடைகளை விட அதிகமாக ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்படுகின்றன. எனவே இளங் கால்நடைகளை, வயது முதிர்ந்த கால்நடைகளிடமிருந்து தனியாகப் பிரித்துப் பராமரிக்கவேண்டும்.
  • நோயினால் அல்லது ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை பண்ணையிலுள்ள மற்ற கால்நடைகளிலிருந்து தனியாகப் பிரித்துப் பராமரிக்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து அவை குணமடைந்த பிறகு, கால்நடைகள் மீண்டும் நோயினால் பாதிக்கப்படுவதைத் தடுக்க மருந்துகளைக் கொடுக்கவேண்டும்.
  • தடுப்பூசிகள் கிடைக்கும்பட்சத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளை அளித்து நோய் வராமல் தடுக்கலாம்.
  • பண்ணையில் சேரும் குப்பைகூளங்கள் மற்றும் சாணத்தை முறையாக அப்புறப்படுத்தவேண்டும்.
  • கால்நடைகளின் தீவன மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் நன்றாகக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் அத்தொட்டிகளின் உட்புறத்தில் வாரம் ஒரு முறை சுண்ணாம்பு அடிக்க வேண்டும்.
  • கால்நடைக் கொட்டகைகளைச் சுற்றியுள்ள குழிகள், தண்ணீர் தேங்குமிடங்கள், சாக்கடைகள் போன்றவற்றை மூடி அவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பண்ணையைச் சுற்றியுள்ள அனைத்து நீர்நிலைகள் மற்றும் மேய்ச்சல் நிலங்களையும் சுற்றி கம்பிவேலி போட வேண்டும். எப்போதும் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தண்ணீரை குழாய்கள் மூலம் கிடைக்குமாறு செய்வது நல்லது.
  • கால்நடைகளின் கொட்டகைகள் மற்றும் அவற்றின் தரை சுத்தமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வெவ்வேறு வயதுடைய கால்நடைகளை ஒன்றாக ஒரே கொட்டகையில் பராமரிக்கக்கூடாது.
  • இளங் கால்நடைகளை வயதான கால்நடைகளுடன் சேர்த்துப் பராமரிக்கக்கூடாது.
  • கால்நடைகளை பண்ணைக்குள் புதிதாக அனுமதிக்கும்போதோ அல்லது கொட்டகைகளில் முதலில் கட்டிப் பராமரிக்க ஆரம்பிக்கும்போதோ அவற்றுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
  • மேய்ச்சலுக்கு கால்நடைகள் அனுப்பப்பட்டால், மேய்ச்சல் நிலத்தை பல்வேறு பகுதிகளாகப் பிரித்து அதில் கால்நடைகளை சுழற்சி முறையில் மேய அனுமதிக்கவேண்டும்.
  • சாகுபடி செய்யப்பட்ட தீவனப்பயிர்களை கால்நடைகளுக்கு அளிப்பதால் மேய்ச்சல் நிலங்களின் மூலமும் மேய்ச்சல் மூலமும் நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.
  • பண்ணையைச் சுற்றியோ அல்லது மேய்ச்சல் நிலங்களைச் சுற்றியோ மனிதர்கள் மலம் கழிக்க அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு அனுமதித்தால் மனிதர்களிலிருந்து தட்டைப் புழுக்கள் கால்நடைகளுக்குப் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது.
  • இடைநிலை நோய் தாங்கிகளாகச் செயல்படும் நாய்கள், காகங்கள்மற்றும் இதர பறவைகளை பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது.
  • பண்ணையில் நத்தைகளைக் கட்டுப்படுத்துவதால் கால்நடைகளின் கல்லீரலைத் தாக்கும் புழுக்களின் தாக்கத்தை ஒரளவு கட்டுப்படுத்தலாம்
  • மேய்ச்சல் நிலங்கள்,குளங்கள், ஓடைகள் மற்றும் இதர இடங்களில் நத்தைகளைக் தாமிரசல்பேட் மூலம் கட்டுப்படுத்தலாம்.
  • ஒரு பகுதி தாமிர சல்பேட்டுடன்,ஒரு மில்லியன் அளவு தண்ணீரைக் கலந்து ,அதிகப்படியான கரிமப் பொருட்கள் இருக்கும் பட்சத்தில் நத்தைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்தலாம்.
top